Mnadu News

அதிரடி காட்டிய ரோஹித்.. ஒத்துழைத்த வானிலை..இந்தியா வெற்றி..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிகள், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 22-ம் தேதி மெகாலியில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. நாக்பூரில் நேற்று முன்தினம் பெய்த மழையால், ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு, போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட், ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், கோலி 11 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் சிக்சரும், 2வது பந்தில் பவுண்டரியும் விளாச, 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 92 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி, தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி, ஹைதராபாத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More