தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையே ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்தார். நேரு உள்விளையாட்டரங்கத்தில் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர், தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலின் பேரில் எனது பணிகளை முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் 234 தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதுவே எனது முதல் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
முதலமைச்சர் தங்கக் கோப்பை’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளைச் சேர்த்து முதலமைச்சர் தங்க கோப்பைக்கான போட்டிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளன.
‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி, ஏடிபி டென்னிஸ் போட்டி ஆகிய போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவோம் என்றார்..
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகார்பாபு, கயல்விழி செல்வராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கே.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.