Mnadu News

அவசர கட்டுப்பாட்டு மையம்: முதல் அமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.

கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, மாநிலத்தில் பெய்துவரும் மழை, வெள்ளம் குறித்த விவரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
அதோடு, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதுடன், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடமும் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Share this post with your friends