Mnadu News

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல்: அமைச்சர் நம்பிக்கை.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் 92 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு சட்டக் கல்லூரி புதிய கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிக் கட்டடம், ஆசிரியர்களுக்கான கட்டடம், கலையரங்கம், விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கட்டடங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: சட்ட தினம் கொண்டாடும் இந்த நாளில், நாமக்கல்லில் அரசு சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவது என்பது சிறப்பான ஒன்றாகும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனக்கு சட்டம் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது. சட்டத்தை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படையான சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதைப்போல சட்டத்தினுடைய உதவி கிடைக்காதவர்களுக்கு சட்ட உதவி விரைந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீதிமன்றங்கள் மட்டும் போதாது, அந்த நீதிமன்றங்களிலே மக்களுக்காக வழக்காடுகிற வழக்கறிஞர்களுடைய எண்ணிக்கையும் அதிகமாக தேவை. என்கின்ற உணர்வோடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலிலே சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய காரைக்குடிக்கு சட்டக் கல்லூரி உருவாவதற்கான அனுமதி தந்தார்.
கல்விக் கட்டடம் மட்டுமல்ல, அவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், அதேபோல அவர்களுக்கான கூட்ட அரங்குகள் இவையெல்லாம் இணைந்து நாமக்கலில் கட்டடம் 2,38,336 சதுரடியில் கட்டப்பட இருக்கிறது

எல்லாவிதமான அடிப்படை வசதிகளோடு கல்லூரிக் கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். எனவேதான் இன்றைக்கு சட்டக் கல்லூரிகளை புதிதாக உருவாக்குகின்றபொழுது அதற்காக செலவிடுகிற தொகை அதிகமாக இருக்கிறது. எங்கே அவசியமாக சட்டக் கல்லூரி தேவையோ, அங்கே தேவைப்படுகின்ற இடத்திலே சட்டக் கல்லூரிகளை உருவாக்குங்கள் என்று எங்களுக்கு முதல் அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
அதே நேரத்திலே மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி நிச்சயமாக அமைந்தாக வேண்டும் என்பது முதலமைச்சர் விருப்பம். எனவே, நிச்சயமாக நாங்கள் வருகிற ஆண்டுகளுக்குள்ளே எல்லா மாவட்டங்களிலும் ஏதாவது ஒரு சட்டக் கல்லூரி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவோம். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும்தான் சட்டக் கல்லூரி இருந்தது. தற்போது மாவட்டம் தோறும் சட்டக் கல்லூரிகள் உருவாகி வருகின்றன. கல்லூரியில் படிக்கிறபோதே மாதிரி நீதிமன்றங்களை உருவாக்கி அங்கேயே மாணவர்களை நீதிபதிகளாக வழக்காடுபவர்களாக, வழக்கு நடத்துகின்றவர்களாக எதிர் வழக்கு நடத்துகின்றவர்களாக உருவாக்கி, அவர்களுக்கு தகுந்த பயிற்சியைத் தருகின்ற இடமாக சட்டக் கல்லூரி அமைகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நவீன முறையில் நடைபெறுகின்றன இணையவழி குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் பொருளாதார குற்றங்கள் பணிகளில் குற்றங்கள் என்று பல்வேறு விதமான புதிய, புதிய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களையும் இன்றைக்கு சட்டக் கல்லூரிகளிலே மாற்றி அமைத்து அதற்கு தகுந்தாற்போல பாடம் படிக்கின்ற சட்டங்களை உருவாக்கி அந்த சட்டங்களில் பயணிக்கிற வாய்ப்பையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறோம்.
குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதிலே சட்டத்துறை அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதிலேயும் நாம் வழக்காடுவதற்கான வாய்ப்புகளை புதிய சட்டங்கள் உருவாக்கித் தருகின்றன. சென்னையில் அரசு சட்டக் கல்லூரி, திருச்சியிலே நேஷனல் லா யுனிவர்சிட்டி, தமிழகம் முழுவதும் 17 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதுதவிர 9 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகள் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய சட்ட அமைச்சர் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுகுறித்து ஆளுநர் கேள்விக்கு உரிய பதில் அளித்துள்ளோம். விரைவில் தடை சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.

Share this post with your friends