Mnadu News

ஆளுநர் ரவி தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு உகந்ததா?: தீர்ப்பு ஒத்திவைப்பு.

சென்னை உயர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவி ஏற்றுகொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு பிரச்சினைக்குரிய நபராகவே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருகிறார். எந்தவொரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்.
அதோடு, ஆர்.என்.ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 உட்பிரிவு 2-ன் கீழ் ஆளுநர் எந்தவொரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறி அவர் தலைவராக உள்ளார் . இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுகிறார். எனவே அவர் ஆளுநராக பதவி வைக்க தகுதியற்றவர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் , “ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானதுதான். தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும்.
ஆனால்;, ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா? என விளக்கமளிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம்” என வாதிடப்பட்டது. பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More