கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பேருந்தில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.