மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் அனைத்தும் தயாா் நிலையில் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மேலும் மக்களவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியன முழுவதும் கையிருப்பில் உள்ளன. இந்தத் தோ்தலில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் என்னும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் காலமானதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இடைத்தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மக்களவைத் தோ்தலில் நடத்தை விதிகள் மீறப்பட்டால் சி-விஜில் எனப்படும் கைப்பேசி செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.