ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகிலுள்ள அல்-பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சின்னாபின்னமாக சிதறி உள்ளது.
இதனால், சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. அதோடு சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களிலும் தீபற்றி எரிய துவங்கின. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.