Mnadu News

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: ஈரோட்டில் வாடகை வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். தேர்தல் வரை இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர்.
அந்த வீடுகளில் தேர்தல் முடியும் வரை வீட்டின் வசதியை பொறுத்து வாடகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், பங்களா தோற்றம் இருந்தால் ரூ.1 லட்சம் வரை வீட்டு உரிமையார்கள் கேட்கின்றனர். தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் தங்கினால் போலீஸ், பறக்கும் படை சோதனை ஏற்படும் என அச்சமடைந்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாடகை அதிகம் என்றாலும் வீடுகளில் தங்குவதையே விரும்புகின்றனர்.
திமுக, அதிமுக கட்சிகள் ஈரோடு நகர் பகுதியில் வீடுகள், பங்களாக்களை வாடகைக்கு பிடித்துவிட்டதால், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈரோடு நகரில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் சோலார், திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர். வீடு பிடிக்கும் பணி உள்ளூர் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இவர்கள் இரவு பகலாக வீடுதேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டீ, வடை கடை, சைவ, அசைவ ஹோட்டல்கள், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. டீ கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். சிலர் பிறகு பாரக்கலாம் என்று சில்லரை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். இப்போதே இந்த தொகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் 10 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் இடைதேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், ஊடகங்களுக்கு தனித்தனியே வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கு கௌரவப் பிரச்னையாகவும், அதிமுகவுக்கு வலிமையை நிருபிக்கும் களமாகவும் இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை மாவட்ட அமைச்சரான சு.முத்துசாமி ஈரோட்டிலேயே முகாமிட்டுள்ளார். தவிர கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட யாராவது ஒரு அமைச்சர் நாள்தோறும் தொகுதிக்கு வந்து செல்கின்றனர். அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் 10 சதவீதம் அளவுகூட தொடங்காத நிலையில் இப்போதே ஈரோடு நகரம் கரை வேட்டி தலைவர்கள், தொண்டர்களால் திணறி வருகிறது.

Share this post with your friends