Mnadu News

உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு வழக்கு: பதில் அளிக்க உத்தரவு.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அரசு மருத்துவரான ஏ.கே.விவேகானந்தன் கொரோனா காலகட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பணியில் இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து. அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி வி.ஆர்.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் .25 லட்சம் ரூபாய் நிவாரணம் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நந்தகுமார், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவரான விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரியான அவருடைய மனைவி 2 குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறார் என்பதால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு தரப்பில் அவகாசம் கோரப்படுகிறது, என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, விசாரணையை வரும் நவம்பர் மாதம் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More