Mnadu News

ஊடகத்துறையில் அதானி: ஆபத்தின் அறிகுறி என கே.எஸ். அழகிரி எச்சரிக்கை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, அனைத்துத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கௌதம் அதானி, ஊடகத்தையும் கபளீகரம் செய்யத் தொடங்கிவிட்டார். என்டிடிவியை நடத்தும் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெடின் 100 சதவீத பங்குகளை வாங்கியதை அடுத்து ,தற்போது அதன் இயக்குநர் பதவியை பிரனாய் ராயும், ராதிகா ராயும் ராஜிநாமா செய்திருக்கிறார்கள்.
ரூ.403.85 கோடி மதிப்புள்ள என்டிடிவி நிறுவனத்தை பங்குதாரர்களின் விருப்பமின்றி கபளீகரம் செய்திருக்கிறது அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட். இதனை மிரட்டி வாங்கியதாகவும் பொருள் கொள்ளலாம். அதானிக்கு இவ்வளவு தைரியம் வருவதற்கு ஆட்சியாளர்கள் அவர் கையில் இருப்பது தான் காரணம்.
என்டிடிவியை அதானி குழுமம் கையகப்படுத்தியது முறையற்ற செயலாகும். என்டிடிவி தொலைக்காட்சியை அதானி குழுமம் வாங்கப்போகும் செய்தி ஊடகங்களில் வந்ததைப் பார்த்தே பிரனாய் ராய் தெரிந்து கொண்டிருக்கிறார் என்றால், அதானியின் ஆபத்தான ஆதிக்கம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிரனாய் மற்றும் ராதிகா ராய் கூட்டாக ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை நடத்துகின்றனர். அந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம் என்டிடிவியில் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இப்போது அதானி குழுமம் வசம் ஆர்ஆர்பிஆர் வருகிறது. என்டிடிவியின் மொத்த மேம்பாட்டாளர்களின் பங்கு 61.45 சதவிகிதம். இந்நிலையில், இன்றைக்கு 100 சதவிகித பங்குகளை வாங்கி அதானி குழுமம் நினைத்ததைச் சாதித்து விட்டது.
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமான நிலையங்கள், துறைமுகங்களை இயக்குதல், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், நிலக்கரி மற்றும் எரிவாயு வர்த்தகம் போன்ற வணிகங்களில் அதானி குழுமம் ஏழு நிறுவனங்களை நடத்தி வருகிறது. பாஜகவின் ஆசியோடு இன்றைக்கு நாட்டின் முதல் பணக்காரர் வரிசைக்கு குறுகிய காலத்திலேயே கௌதம் அதானி முன்னேறியுள்ளார். இன்றைக்கு ஊடகத்துறையிலும் ஊடுருவத் தொடங்கிவிட்டார்.
இதேபோல், பிரதமர் மோடியின் மற்றொரு தொழிலதிபர் நண்பரான முகேஷ் அம்பானியும் நியூஸ் 18 சேனலை இப்படித்தான் கபளீகரம் செய்தார். அதானி குழுமமும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ரியும் தான் இன்று இந்தியாவைக் கூறு போடும் போட்டி நிறுவனங்களாக இருக்கின்றன. அதே சமயம் இந்த நிறுவனங்களின் பெருந்தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பராக பிரதமர் மோடி இருப்பதையும் நாடு அறியும்.
கார்ப்பரேட் உலகில் இதுநாள்வரை கோலோச்சி வரும் இரு பெரும் தொழில் முதலைகளான அதானி குழுமமும் ரிலையன்ஸ் குழுமமும், இனி இந்திய தனியார் தொலைக்காட்சி உலகிலும் ஆதிக்க சக்தியாக விளங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது
சட்டப்பேரவை, நீதி, நிர்வாகம் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்கள் மக்களாட்சி எனும் மணிமண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்தத் தூண்கள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்துவிட்டு நான்காவது தூணான பத்திரிகைகள் மற்றும் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறியாகும்.
பாஜக ஆட்சியில் துருப்பிடித்துப்போன ஜனநாயகத் தூண்களைப் பாதுகாக்க மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என அழகிரி கூறியுள்ளார்.

Share this post with your friends