ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ளது புகழ்பெற்ற என்.டி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெயரை, தனது தந்தையின் பெயரான ஒய்.எஸ்.ஆர். என மாற்ற ஆந்திர முதல் அமைச்சரும்; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார்.
இதற்கான மசோதா ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் 21 அன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு வகைகளில் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்.எஸ்.ஆர். பல்கலைக்கழகம் என மாற்றும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளாவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.