Mnadu News

கடுமையான வாகன அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் பயணம், ஒருவழிப்பாதையில் பயணம் உள்ளிட்ட அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையை விட திருத்தப்பட்ட வாகனச் சட்டத்தின் படி வசூலிக்கபடும் அபராத தொகையானது தற்போது 400 சதவிகிதம் முதல் ஆயிரத்து 900 சதவிகிதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னாலும் கூட, இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது. மாறாக, போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு கூடுதலான தன்னார்வலர்களை இப்பணிகளில் ஈடுபடுத்திட முன்வர வேண்டுமெனவும், அதேபோல தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும் எனவும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை கூடுதலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends