50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வாழ்க்கையில் இருந்து வருகிறார் வை.கோபால்சாமி என்ற வைகோ. கடந்த 1964 ஆம் ஆண்டு; முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரை முன்னிலையில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார்.
ஈவெரா கொள்கையில் ஈர்க்கப்பட்ட வைகோ, திமுக.,வில் இணைந்து பெரிய பேச்சாளார் ஆனார். அப்போது முதல் இpந்து மதத்தை பற்றியும், இந்து கடவுள் பற்றியும் இந்துக்களின் மனம் புண்படும்படி மேடை பேச்சுகளில் பேசிவந்தார்.
வாழ்நாளில் ஈவெரா கொள்கைகளை மேடையில் முழங்கி, கருப்பு துண்டு அணிந்து அடையாளம் காணப்பட்ட வைகோ, திமுக.,வில் இருந்து பிரிந்து மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் (மதிமுக) என்ற கட்சியை துவக்கினார்.
புதிய கட்சியாக இருந்தாலும், அதே கொள்கையை கடைப்பிடித்து இந்து கோவில்களுக்கு செல்வதில்லை, அப்படியே சென்றாலும் சாமி தரிசனம் செய்வதில்லை. தற்போது திமுக கூட்டணியில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
அப்படி இருக்கையில் தற்போது தனது கொள்கை மட்டுமல்ல, கருப்பு துண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு பயபக்தியுடன் அவர் சாமி தரிசனம் செய்வதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தான் பிறந்த கலிங்கப்பட்டியில் உள்ள மேல மரத் தோணி ஸ்ரீPசுந்தரராஜ பெருமாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்யும் வீடியோவை இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.
வைகோவின் தாத்தா கோபாலசாமி 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய இக்கோவிலை தனது சொந்த செலவில் புனரமைப்பு செய்து வருகிறார்.
அந்த வீடியோவில், பூஜாரி தீபாராதனை காட்ட அதனை பயபக்தியுடன் தொட்டு வணங்குகிறார் வைகோ. அருகில் நிற்பவரிடம் தன் அடையாளமாக கருதப்படும் கருப்பு துண்டை தோளில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார். கருப்பு துண்டுடன் அந்த நபர் ஓரமாக நிற்கிறார்.
பிறகு உடனிருப்பவரிடம் பணத்தை பெற்று பூஜாரி தட்டில் காணிக்கை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து பூஜாரி அளித்த தீர்த்த பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு, குங்குமம் எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார். கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகள் குறித்தும் அங்கிருந்தவர்களிடம் பேசுகிறார்.
கருப்பு துண்டு அணிந்து நாத்திகம் பேசிவந்த வைகோ, ஆன்மிகம் பாதைக்கு திரும்பியதற்கு வரவேற்பு எழுந்துள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.