Mnadu News

காசியைப் போல் தமிழகமும் பழமையும், பெருமையும் வாய்ந்தது: மோடி புகழாரம்.

தமிழ்நாட்டிற்கும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஆன்மிக, கலாசார தொடர்பை கொண்டாடும் நோக்கில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் இருந்து 12 குழுக்கள் காசிக்கு செல்ல திட்டமிடப்பட்டு, முதல் குழு கடந்த 16 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காசி சென்றடைந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் இன்று பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து வந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதையடுத்து, வெளிநாட்டு மொழியான கெமர் மொழி உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.அதையடுத்து, வணக்கம் காசி” “வணக்கம் தமிழ்நாடு” என்று கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி , காசி-தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன் என்றார்.
காசியைப் போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது. கலாசார பெருமை வாய்ந்தது.,பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகின்றது.
காசியில் துளசிதாசரும், தமிழகத்தில் திருவள்ளுவரும் பெருமை வாய்ந்தவர்கள் காசியும், தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றது என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இசைஞானி இளையராஜா, பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this post with your friends