Mnadu News

காசியோ தமிழகமோ நமது கலாச்சாரம் ஓன்று தான்: யோகி ஆதித்யநாத் டுவீட்.

75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை இந்தியா அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக காசி தமிழ் சங்கமம் 2022- நிகழ்ச்சி உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்க உள்ளது. காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையிலும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த விஷேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. நாட்டின் கலாசாரங்கள், பன்முகத்தன்மை கல்வி சார்ந்த பரிமாற்றங்கள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த இரு மாநில மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். ‘காசி தமிழ் சங்கமம்’ ஆனது இந்த ‘ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்” என்று கூறியிருக்கிறார். இந்த பதிவை தமிழில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends