Mnadu News

குஜராத் மோர்பி பால விபத்து: ஒரேவா மேலாண் இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்.

மோர்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபர் 30-ஆம் தேதி பாலத்தில் சுமார் 250 பேர் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியர்கள், பாலத்தை பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரர்கள், 3 பாதுகாவலர்கள் என 9 பேர் கைதாகினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மோர்பி தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல் பெயர் இடம்பெற்றிருந்தது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஜெய்சுக் படேலுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்த நிலையில், அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது பிப். 1-இல் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மோர்பி நீதிமன்றத்தில் ஜெய்சுக் படேல் இன்று பிற்பகலில் சரணடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share this post with your friends