மத்திய பிரதேச மாநிலம், டெக்கான்பூரில் உள்ள பிஎஸ்எப் அகாடமியில் 14.11.2022 முதல் 26.11.2022 வரை 41வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன. இரண்டு வாரங்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமார் 300 குதிரைகளும், 600 ரைடர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன், இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் லாலா பி கே டெய், சிரோகி சேலன்ஜ் கோப்பைகளையும், ஒரு வெள்ளிப் பதக்கமும், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை காவலர்கள் மணிகண்டன், மகேஷ்வரன், சுகன்யா ஆகியோர் தங்கப் பதக்கமும், முதுநிலை பெண் காவலர் சுகன்யா தங்கப் பதக்கத்தையும், டிஜிபி அரியானா கோப்பையும், குதிரை பராமரிப்பாளர் தமிழ்மணி அவர்கள் வெண்கலப் பதக்கமும், குதிரை பராமரிப்பாளர் ராஜகணபதி வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.
இந்நிலையில், 41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 3 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுத் தொகையாக விரைவில் வழங்கப்படும்.