கேரளாவில் வருகிற 15-ந்தேதி அட்டிங்கல், ஆலத்தூர், திருச்சூர் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே தினத்தில் ராகுல் காந்தியும் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் கேரளாவில் போட்டி பிரசாரம் செய்கின்றனர். இதனால் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வர இருக்கின்றனர். கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வருகிற 16-ந்தேதி கண்ணூரில் பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர். பாரதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பிரமோத் சாவந்த், அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கோழிக்கோட்டிலும், புருஷோத்தம் ரூபாலா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆலப்புழாவிலும், மீனாட்சி லேகி வயநாடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளத்திலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திலும் பிரசாரம் செய்கிறார்கள்.