Mnadu News

கொரோனாவுடன் வாழப் பழகும் மக்கள்: ஊரடங்கு கொள்கையை கைவிட்ட சீனா.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இந்த நிலையில் சீனா முழுவதும் கொரோனா அதிகரித்தாலும் பீஜிங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படவில்லை. அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடுவதற்காக பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலைத் தடுக்க சீனா கையாண்ட கடுமையான கட்டுப்பாடுகளை இம்முறை நடைமுறைப்படுத்தவில்லை. இதன் மூலம் மக்களை கொரோனாவுடன் வாழ சீனா அனுமதித்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து இருந்தாலும், தொடர்ந்து 6-வது நாளாக கொரோனாவினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வைரஸ் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். இதன் காரணமாக சீனர்களுக்கு ஹெர்டு இம்யூனிட்டி உருவாகவில்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரஸால் அந்த நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) ஏற்பட்டுள்ளதால் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தியாவின் சிசிஎம்பி ஆய்வு மையம் சுட்டிக் காட்டியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends