Mnadu News

கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் 23.6.2015-இல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி; தீர்ப்பளித்தது.
யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய இளம் பெண் சுவாதியை (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த 25- ஆம் தேதியன்று, சுவாதியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம், 23.6.2015- இல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சி போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும்பெண் நீங்கள் தானா? பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பியிருந்தனர்.
வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது என்று பதிலளித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும் என்று கூறி, விசாரணையை நவ.30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று சுவாதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைக்காவது உண்மையைச் சொல்ல முயற்சியுங்கள். அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.
இதனையடுத்து, தவறான தகவலை அளித்ததாகக் கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this post with your friends