Mnadu News

சர்வதேச முருங்கை கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘காவிரியும் அமராவதியும் கரைபுரண்டோடும் கரூர் மாவட்டத்தின் மண்வளமும் பருவநிலையும் முருங்கைச் சாகுபடிக்குப் பொருத்தமானதாக இருப்பதால், கரூர் மாவட்டம் முருங்கைக் களஞ்சியமாகத் திகழ்கிறது.
அதனைக் கருத்தில் கொண்டே கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் மதுரையை ‘முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம்’ எனக் கழக அரசு சென்ற ஆண்டு அறிவித்தது.
உணவில் சுவையைக் கூட்டுவதில் மட்டுமல்ல, உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய மருத்துவப் பண்பும் முருங்கைக்கு உண்டு. காய், இலை, விதை, பட்டையென முருங்கையின் அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
இந்நிலையில், கரூரில், 6 நாட்கள்; நடைபெறும் பன்னாட்டு முருங்கைக் கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் பயன்படும் இந்த உன்னத முருங்கையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், பல்வேறு பயன்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வேளாண் பெருமக்கள் அறிய இந்தக் கண்காட்சி மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த முருங்கைக் கண்காட்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
முருங்கை உழவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, பன்னாட்டு முருங்கைக் கண்காட்சிக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் இந்தியத் தொழில் கூட்டமைப்பிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வேளாண் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More