Mnadu News

சிசிடிவியில் தெரிவது நான் அல்ல: கண்ணீர் விட்டு கதறிய சுவாதி.

நாமக்கல் மாவட்டம், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொலை தொடர்பாக 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் சிறைத் தண்டைனையை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட 5 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தொடக்கக் காலத்தில் சுவாதி முக்கிய சாட்சியாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் பிறரது வாக்குமூலங்களைப் பெற்ற போது, இடையில் ஏதோ நடைபெற்றதாக சந்தேகம் எழுகிறது. நீதித் துறையின் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் வகையில், சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க நீதிமன்றம் விரும்புகிறது. இது கட்டாயம், தேவையான ஒன்று.

எனவே, சுவாதி, அவரது குடும்பத்தினருக்கு, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளவோ கூடாது. சுவாதி பயமின்றி நீதிமன்றத்துக்கு வருவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சுவாதியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறையில் இன்று ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடடனர். இதையடுத்து, சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், கோகுல்ராஜ் பற்றி கேட்கப்பட்டது. அப்போது, கோகுல்ராஜ் பின்னணி குறித்த எனக்கு எதுவும் தெரியாது என்று சுவாதி பதிலளித்தார்.
பிறகு, கொலை நடந்த போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில், கோகுல்ராஜ் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை சுவாதிக்குப் போட்டுக் காட்டி, கோகுல்ராஜுடன் நடந்து செல்லும் அந்தப் பெண் யார் என்று மூன்று முறை நீதிபதிகள் கேட்டதற்கு தெரியாது என்று கண்கலங்கியபடியே பதிலளித்தார். உண்மையை மனசாட்சிக்கு உள்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கூறியபோது, சுவாதி கண்ணீர்விட்டு கதறினார்.

Share this post with your friends