சீனாவில் 2019 ஆம் ஆண்டு துவங்கிய கொரோனா தாக்கம் பல உலக நாடுகளை பந்தாடி உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இதனால் அனைவரது வாழ்விலும் பின்னடைவு ஏற்படும் அளவுக்கு சூழல் உருவாகி உள்ளது. மெல்ல மெல்ல உலகமே சீராகி வரும் போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது சீனாவில்.
அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 38,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சீனாவின் உள்ளூர் பகுதிகளில் 37,828 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 33,540 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், 4,288 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,233 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,19,536 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.