Mnadu News

செந்தில்பாலாஜி-செஞ்சி மஸ்தானை நீக்குக”: முதல் அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு உயிரிழந்தவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது. மரக்காணம் துயரச் சம்பவத்தில், மரூர் ராஜா எனும் சாராய வியாபாரியின் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது.அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமான மரூர் ராஜர், சிறையில் இருந்தபடியே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு சாராய வியாபாரியை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்து கொண்டிருக்கிறாரா?. கள்ளச் சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். ஏற்கெனவே, டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், தாய்மார்களின் கண்ணீரையும் வெறும் இழப்பீடு கொடுத்து சரிசெய்துவிடலாம் என்று முதல் அமைச்சர் நினைத்தால், அது மிகவும் தவறான போக்காகும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக தயங்காது என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends