Mnadu News

சென்னை விமான நிலையம்: வாகன நெரிசலை குறைக்க தனித்தனி வழிகள்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான சேவை, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பெருமளவு அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.தற்போது, சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் வரும் அனைத்து வாகனங்களும் ஒரே பகுதி வழியாக வந்து, வெளியேறுவதால் வாகனங்களின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் நெரிசல்கள் ஏற்பட்டன. இதை பயன்படுத்தி சில வாகனங்கள் கட்டணங்கள் செலுத்தாமல் வெளியேறி விடுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவும், வாகன நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உள்நாட்டு விமானம் முனையத்துக்கு வரும் வாகனங்கள் ஒரு வழியாக வந்து விட்டு மற்றொரு வழியாக திரும்புவதற்கும், சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளே வருவதற்காகவும், பின்னர் அந்த வாகனங்கள் வெளியே செல்வதற்காகவும் புதிதாக வழிகள் அமைக்கப்படுகின்றன. சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே இந்த புதிய வாகன வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்வதற்காக கூடுதலாக தனித்தனியாக கட்டண சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்தில் வாகன நெரிசல்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வழிகளில், கட்டணம் வசூல் செய்யும் கவுண்ட்டர்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஏற்கனவே 250 கோடி ரூபாயில் 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ள 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த புதிய கட்டண வசூல் கவுண்ட்டர்களும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share this post with your friends