Mnadu News

ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு.

உலகின் வலிமையான சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது ஜி-20 கூட்டமைப்பு. பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பாக இது திகழ்கிறது. ஜி-20 கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் 3-இல் இரண்டு பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில் இது உலகிற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக உள்ளது. இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று காலை பாலியில் உள்ள நுரா ராய் மாங்குரோவ் காடுகளை பார்வையிட்ட உலகத் தலைவர்கள் மரக் கன்றுகளை நட்டனர்.இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதையடுத்து, டிஜிட்டல் பரிமாற்றம் எனும் தலைப்பில் நடைபெற்ற அமர்வில் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, பல புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உலகில் மிகப் பெரிய மாற்றத்தை நமது காலத்தில் ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஏழ்மை ஒழிப்புக்கான பல்வேறு உத்திகளில் தொழில்நுட்பம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பதாகக் கூறிய நரேந்திர மோடி, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு உலக சவால்களுக்கு தொழில்நுட்பம் தீர்வு தர முடியும் என்றார்.
இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஸ்கால், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டோரை தனித்தனியே சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்று, பொறுப்பை பிரதமர் மோடி வசம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். எனினும், வரும் டிசம்பர் 1ம் தேதிதான் இந்தியா ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி ஏற்க இருக்கிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More