நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றங்களை வலியுறுத்தியது.
அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு அளிக்கப்பட்ட விளக்கத்தில் “தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.