Mnadu News

தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை: சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அந்நாட்டில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் புது வகை கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் மருத்துவ ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதனை ஆய்வு செய்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை சரிபார்த்து இருக்கிறோம்.
ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளோம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் பொறுப்பு அதிகாரிகளும் 12 மணி நேரம் மருத்துவமனையில் ஆய்வு செய்து ஆக்சிஜன் வசதி, சிலிண்டர் உள்ளது, எவ்வளவு படுக்கை வசதி, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவிட் வந்தால், எதிர்கொள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் தலைமைக்கு தெரியப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
2வது அலையின் போது என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவிட் பாதிப்பு குறைவாக உள்ளது. கடந்த 20 நாட்களாக 10க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் 51 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜப்பான் , சீனா ,தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவல் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
பெரியளவில் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. 6 மாதத்திற்கு தேவையான மருந்து கையிருப்பும் உள்ளது. 1.75 லட்சத்திற்கும் மேலான படுக்கை வசதிகள் உள்ளது. எனுவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மருத்துவ பணியாளர்கள் போதுமானளவு உள்ளனர். தேவைப்பட்டால், அதற்கான கட்டமைப்பை 24 மணி நேரத்தில் ஏற்படுத்த முடியம். தமிழகம் தயார்நிலையில உள்ளது என்பதை ஒத்திகை நிகழ்ச்சியில் உறுதிபடுத்தி இருக்கிறோம். என்று கூறினார்.

Share this post with your friends