Mnadu News

‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’:குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கை.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதன் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் குஜராத் முதல் அமைச்சர் பூபேந்தர படேல், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் 40 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில்,
தீவிரவாத அமைப்புகளுக்காக ஸ்லீப்பர் செல்களாக இருந்து செயல்படுபவர்கள், தேச விரோத சக்திகள் ஆகியோரை எதிர்கொள்ளும் நோக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவு கொண்டு வரப்படும்
மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தப்படும்
பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளிடம் இருந்து அதற்கான இழப்பீட்டைப் பெறுவதற்கான சட்டம் கொண்டு வரப்படும்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜெ.பி.நட்டா, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு, மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
பாஜகவின் ஆட்சியில் குஜராத் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருப்பதாகவும், அந்த வளர்ச்சி அடுத்தகட்டத்திற்குச் செல்ல பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறும் அவர் வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும், அனைத்து பெண்களுக்கும் உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியும் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends