தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சங்காரெட்டி நகருக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அவர், ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானாவின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வளர்ச்சி பணிகளானது, சாலை, ரெயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளுடன் தொடர்புடையவை ஆகும்.
இந்த நிகழ்ச்சியில், ஐதராபாத் நகரில் அமைந்த பேகம்பட் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்புக்கான மையம் ஒன்றும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம், விமான போக்குவரத்து துறையில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது.
இந்த மையம் ரூ.350 கோடிக்கும் கூடுதலான மதிப்பில் கட்டப்பட்டு, நவீன வசதிகளை கொண்டதுடன், 5 நட்சத்திர கிரஹ ரேட்டிங்கும் மற்றும் சக்தி பாதுகாப்பு கட்டிடத்திற்கான குறியீட்டு விதிகளையும் கொண்டிருக்கும். இவைதவிர, 3 தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.