Mnadu News

தோற்றால் அதுவே கடைசி தேர்தல்: சந்திரபாபு நாயுடு முடிவு.

ஆந்திர மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அம்மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் 2024 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தலாக இருக்கும் என ஆந்திர முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குர்னூலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு பேசினார்.
மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு எதிர்கால ஆந்திரத்திற்கும், குழந்தைகளுக்கும் தான் போராடி வருவதாகக் குறிப்பிட்டார்.
அதோடு;, மாநிலத்தின் நிதிநிலைமையை மேம்படுத்தவும், நலத்திட்டங்களை உருவாக்கவும் தான் பணியாற்றுவேன் எனவும் உறுதி தெரிவித்தார்.
கடந்த 2021 நவம்பர் மாதம் தனது மனைவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவமரியாதை செய்ததாகத் தெரிவித்திருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திரத்தில் மீண்டும் ஆட்சியமைக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends