கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்சுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து இருந்தனர். பின்னர் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்பட 10 ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும், மின்சார இணைப்பை துண்டித்து காயமடைந்த 7 ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.