Mnadu News

நாகையில் விற்பனைக்காக தரமற்ற நிலையில் வைத்திருந்த நெல் மூட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி ஊராட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் விக்னேஷ்வரன். இவர் ஆந்தக்குடி – புதுபத்தூர் சாலையில் சண்முகா வணிக வளாகம் என்ற பெயரில் நெல் கொள்முதல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29 ஆம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் சண்முகா வணிக வளாகத்தை கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார்,தேவூர் வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் செல்வேந்திரன் மற்றும் 
நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

விவசாயிகள் இடம் இருந்து வாங்கி வைத்து இருந்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக 2022-23 -ஆம் ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய சணல் சாக்குகளை கொண்டு தரமற்ற தூய்மை செய்யப்படாத , ஈரப்பதம் அதிகம் உள்ள 41.600 கிலோ எடை கொண்ட 98 நெல் மூட்டைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசால் வழங்கப்படும் சணல் (சிவப்பு நிற கொண்ட) கொண்டு தைக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

விசாரணையில் விக்னேஷ்வரன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புதிய சாக்குகளை  கொண்டு நெல் மூட்டைகளை காக்கழனி, திருக்குவளை தாலுகா  நீர்முலை, ,திருவாய்மூர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் 41.600 கிலோ எடை கொண்ட 98 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்த வட்டாட்சியர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நெல் மூட்டைகளை ஆந்தக்குடி கிராம நிர்வாக அலுவலர் இடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.90 ஆயிரத்து 781 ஆகும். இது குறித்து கீழ்வேளூர் வட்டாசியர் ரமேஷ்குமார் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends