உச்ச நீதிமன்றத்திற்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் தற்போது கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனினும், புதிய நீதிபதிகளை தேர்வு செய்வதில் அதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித்துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும், இந்த ஆணையத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு அரசு தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றங்களில் அதிக அளவில் வழக்குகள் தேங்கி கிடப்பது குறித்த கேள்விக்கு சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். நீதிபதிகள் நியமன முறைதான் இதற்கு அடிப்படை காரணம். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு மிகச் சிறிய அளவுதான் பங்கு இருக்கிறது. கொலிஜியம்தான் பெயர்களை பரிந்துரைக்கிறது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.
தரமான, இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக் கூடிய வழக்குரைஞர்களை பரிந்துரைக்கும்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், தற்போதைய கொலிஜியம் முறை, நாடாளுமன்றத்தின் உணர்வுகளையோ அல்லது மக்களின் உணர்வுகளையோ பிரதிபலிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அப்படித் தெரிவித்தால், அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கருத நேரிடும். ஆனால், நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. 1993-ல்தான் இது மாற்றப்பட்டது. கொலிஜியம் நடைமுறையை மாற்றாவிட்டால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்று அவர் தெரிவித்தார்.