நாட்டை சூறையாடுவதுதான் இந்தியா கூட்டணியின் எண்ணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.
வட சென்னை நம்மாழ்வார் பேட்டையில் பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; வேண்டும் மோடி மீண்டும் மோடி என இந்தியாவே கூறி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. நாட்டை சூறையாடுவதுதான் இந்தியா கூட்டணியின் எண்ணம். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய போது தமிழகம் கொதித்து எழுந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படி பேச முடியும்?. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.