தர்மபுரி மாவட்டம் நரசியர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல் – பழனியம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் துப்புரவு பணியாளராக ஜெயவேல் பணிபுரிந்து வருகிறார். மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மேலும், மாதம் ₹4870 வீதம் 24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயவேல் 20 மாதங்கள் கடனை சரியாக திருப்பி செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தாததால் கடந்த 3 மாதமாக மீதமுள்ள தவணை தொகை கட்ட வலியுறுத்தி வந்த நிலையில் ஊழியர்கள் ஜெயவேலின் வீட்டிற்கு வந்து நான்கு மாத தவனை தொகையை வட்டியுடன் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அதை இன்றே செலுத்த வேண்டும் என கூறி கடுமையான வாரத்தைகளால் திட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடனை நாளை திருப்பி கொடுத்து விடுகிறேன் என ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியும் கேட்காமல் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்றே மீதமுள்ள பணத்தை கட்டியே தீர வேண்டும் என நெருக்கடியை கொடுத்துள்ளனர். அதனால் மனஉலைச்சலுக்கு ஆளான ஜெயவேல் திடீரென வீட்டுக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக ஜெயவேலுவின் உடலை அனுப்பி வைத்துவிட்டு, அந்த நிதி நிறுவன ஊழியர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஊர் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.