Mnadu News

நிலமோசடி புகார்:லாலு பிரசாத் மனைவி, மகள்கள் வீடுகளில் சிபிஐ சோதனை.

நிலமோசடி தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாப் யாதவ் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக சிபிஐ வட்டாரம் கூறுகையில்,ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, வேலைக்காக அணுகியவர்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த விளம்பரமோ, பொது அறிவிக்கையோ இல்லாமல் இந்த நியமனங்கள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், பாட்னாவில் சுமார் 1.05 லட்சம் சதுர அடி அளவிலான நிலங்கள் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. நிலவழிகாட்டி மதிப்பின்படி இந்த நிலங்களின் இப்போதைய மதிப்பு ரூ.4.39 கோடியாகும். சில நிலங்கள், லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களால் நேரடியாக ரொக்கப் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு நிலங்கள் மாற்றப்பட்டதிலும் முறைகேடான பணி நியமனங்களிலும் போலா யாதவ் முக்கியப் பங்கு வகித்திருப்பது தெரியவந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் கூறினர்.இதுதொடர்பாக, லாலு பிரசாத், ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகள் ஹேமா யாதவ் உள்பட 16 பேர் மீது சிபிஐ கடந்தாண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் உள்ள லாலு மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends