பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு மத பிரச்சாரகரான அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள், சமீபத்தில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும், அம்ரித்சர் நகருக்கு அருகில் உள்ள அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்களுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய படையை அனுப்புமாறு அவர் கோரியதாகத் தெரிகிறது. இதையடுத்து, கலவர தடுப்புப் படையுடன் கூடிய 18 கம்பெனி துணை ராணுவப்படையை பஞ்சாபுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். மொத்தம் 2,430 துணை ராணுவப் படையினர் பஞ்சாபுக்குச் செல்வார்கள் என்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பகவந்த் மான், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், ”எல்லை வழியாக ட்ரோன்கள் மூலமாக போதைப் பொருட்கள் வருவது குறித்து அமித் ஷா உடன் விவாதித்தேன். எல்லையில் முள்வேலியை மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசோடு இணைந்து செயல்படும்” என பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகவும், அம்ரித்பால் சிங்குக்கு நிதி உதவி அளிப்பவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.