Mnadu News

பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா – அமெரிக்கா கூட்டறிக்கை.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா,”இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, அல் கய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் வன்மையாக கண்டிக்கின்றன. தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என இந்திய – அமெரிக்க கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends