பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எம்.எஸ்.பி.யை உயர்த்தி சட்டப்பூர்வ உத்தரவாதம் தருவதாகச் சொல்லியிருந்தார் – இதுதான் உத்தரவாதமா?
நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை. இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் கவலைப்படவில்லை. 10 ஆண்டுகளில் இந்த மனிதரால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவரது தேர்தல் அறிக்கையை நம்புவது சரியல்ல. மக்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என தெரிவித்தார்.