கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில்
கோவையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காமாட்சிபுரம் அருகே வந்தபோது ஒலிபெருக்கிகளை அணைத்து விட்டு வாக்காளர்களை பார்த்து கைகளை அசைத்தவாறு இரு கரங்களைக் கூப்பி வணங்கி வந்தார்.
அப்போது அங்கு வந்த போலீசார், காரை நிறுத்தி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது இது தேர்தல் விதிமுறை மீறல் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வாக்குவாதம் செய்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.