பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். முன்னதாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார், சிறப்பு பிரிவு போலீசார் 5 அடுக்குகளாக பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.