நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச அரசு மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் கற்பிக்க முனைந்துள்ளது. முதலாமாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான 3 பாடப் புத்தகங்களை இந்தி எழுத்து வடிவில் மாநில அரசு மொழியாக்கம் செய்துள்ளது. அந்தப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் வெளியிட்டார். நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு அந்தப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
அனைத்து மாநிலங்களும் மருத்துவம், பொறியியல் படிப்புகளை பிராந்திய மொழிகளிலேயே வழங்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு ஆங்கிலம் தடையாக இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த வலியுறுத்தலை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகம், உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களும் மருத்துவப் படிப்புகளுக்கான புத்தகங்களை பிராந்திய மொழிகளில் மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவப் படிப்புகளை பிராந்திய மொழியில் வழங்குவது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.ஏ.ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிராந்திய மொழிகளில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதால் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும் என அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இது பலனளிக்கும். ஆனால், நீண்டகால அடிப்படையில் மருத்துவ அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இது உதவாது.
நவீன மருத்துவ நடைமுறையானது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. பிராந்திய மொழியில் கல்வி கற்றால், வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவதிலும் கல்வி கற்பதிலும் திறனை வளர்த்துக் கொள்வதிலும் பிரச்னைகள் ஏற்படும்.
வெறும் பாடப் புத்தகங்களால் மட்டுமே மருத்துவ அறிவைப் பெற்றுவிட முடியாது. சுர்வதேச இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் மாணவர்கள் படிக்க வேண்டியது அவசியம். அவையனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அதற்கு ஆங்கில அறிவு அவசியமானது. உள்ளூரிலேயே பணியாற்ற வேண்டுமெனில் பிராந்திய மொழியில் கற்கலாம். உலக அறிவு வேண்டுமெனில் பிராந்திய மொழி மட்டும் போதாது’ என்றார்.
ஐஎம்ஏ தேசிய செயலர் கரண் ஜுனேஜா கூறுகையில், ‘மருத்துவக் கல்வியை பிராந்திய மொழிகளில் வழங்குவதைத் தவிர்த்து, பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசுகள் கவனம் செலுத்தலாம். போதிய ஆங்கில அறிவு இன்றி மருத்துவம் பயில வரும் கிராமப்புற மாணவர்கள் கல்லூரியில் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை எளிதில் தகவமைத்துக் கொள்கின்றனர். சூழ்நிலை அவ்வாறாக இருக்கும் போது பிராந்திய மொழியில் கல்வியை வழங்குவது அவர்களது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்’ என்றார்.