கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த குஜராத் வன்முறை சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக்கோரி இக்குற்றத்தில் தொடர்புடைய ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவர் அளித்த மனுவில், ’11 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தின் தேவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுவித்து இயந்திரத்தனமான கட்டளையை மாநில அரசு பிறப்பித்துள்ளது. 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அனைவரும் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொள்கையை 2003-ஆம் ஆண்டே மாநில அரசு ரத்து செய்துவிட்டது. அப்படி இருக்கும்போது 11 பேரையும் 1992-ஆம் ஆண்டு கொள்கையின்படி விடுவித்தது பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டிய தேவை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி பெலா எம்.திரிவேதி இந்த வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க வேண்டும் என்று பில்கிஸ் பானு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பில்கிஸ் பானு அளித்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More