புதுச்சேரியில் மாயமான சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அம்பலமாகிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் 9 வயது ஆர்த்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக பெற்றோர் மகளை காணவில்லை என்று முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சோலை நகரையொட்டியுள்ள அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாக கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது.
சிறுமி சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் சிறிய தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திய போது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட போது உயிரிழந்துவிட்டதாகவும் பின்னர் போலீஸ்க்கு பயந்து சிறுமியின் கை, கால்களை கட்டி உடலை கால்வாயில் வீசியதாக கைது செய்யப்பட்ட இருவரும் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். மேலும் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் ஒப்புதல் வழங்கினர். இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.