ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல் அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.இதுதொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரம் வருமாறு, கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சேர்ந்த சிலர் நியமிக்கப்பட்டனர். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிலம், லாலுவின் குடும்பத்தினர் மற்றும் தனியார் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தையும் லாலு குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். இதுபோல பாட்னாவில் சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை லாலு குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அந்த நிலத்தை அப்போதைய சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினர் நேரடியாக வாங்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்குத் தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரை மார்ச் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில், பாட்னாவில் உள்ள ராப்ரி தேவி வீட்டில், அவரிடம் சிபிஐ குழு திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. அதேவேளையில் வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்குத் தொடர்பாக லாலு பிரசாதிடம் விசாரணை நடத்த சிபிஐ நோட்டீஸ் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 2025க்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி உறுதி.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி ஆயிரத்து 780 கோடி ரூபாய்...
Read More