தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணை சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்று இருந்தனர்.
திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்குக் குறித்து ஸ்ரீPரங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதோடு; 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது
ஆனாலும் கொலையாளிகள் யார் என்பது தெரியாததால் நீதிமன்ற உத்தரவுப்படி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் இடம் பெற்று இருந்தனர்.
சிறப்பு புலனாய்வுக்குழு பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அதே மாடல் கார்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தி வந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.
இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு காவல் துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக திருச்சியை சேர்ந்த சாமி ரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 12 பேரும் இன்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற எண் 6-ல் ஆஜராக வேண்டும் தெரிவித்து இருந்தனர். அதோடு, அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆட்சேபனை இருப்பின் அதை நீதிமன்றத்தில்; தெரிவிக்கலாம் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, 2 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். அதில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தற்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 12 பேரிடம் அதிரடியாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்குமா என்பதை பொருத்திருந்துத் தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.