ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குபோதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பரமக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சந்தேகத்துக்கிடமாகச் சென்ற சென்னையைச் சேர்ந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த இருவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரித்தனர். இதில், அவர்கள் காரில் கடத்தி வந்தது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களான 50 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் 38 கிலோ கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனத் தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.160 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருட்களை சென்னையிலிருந்து கார் மூலம் கடத்தி வந்து மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (39), தனசேகரன்(32) ஆகியோரை கைது செய்து, ராமநாதபுரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More