புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தங்களது பணியை தொடங்கிய உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு இருந்தது. அதேபோல், அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்று நேரில் விவாதித்தது.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.